தேடல் 5
பகுதி 5
வினய் அப்பா சொன்ன நண்பரைப் பார்த்து அவரிடம் ஜூனியராக சேர்வதற்கு பைக்கில் செல்கிறான். அவர் பெயர் வரதராஜன், வழக்கை வாதாடுவதில் வல்லவர். அதுமட்டுமில்லாமல் நேர்மையானவர். அவரின் திறமைக்கு கோடி கோடியாக சொத்து சேர்த்து வாழ்ந்திருக்கலாம். ஆனால் வரும் கேஸ் அனைத்தையும் அவர் ஏற்பதில்லை அவர் மனதிற்கு சரி என்று பட்டால் மட்டுமே அதை ஏற்பார், பணத்தை வைத்து இவரை விலைக்கு வாங்க நினைத்து ஏமாந்து போனவர் நிறைய பேர். அதனால் இவர் சந்தித்த மிரட்டல்கள் நெருக்கடிகள் நிறைய, இருந்தும் இவர் எதற்கும் மசியாதவர்.கடமை கண்ணியம் கட்டுப்பாடு நேர்மை இதற்கு மறுபெயர் தான் இந்த வரதராஜன். அதனால் தான் சீனிவாசனின் சாய்ஸ் வரதராஜனாக இருந்தது.
நண்பர் மகன் என்று நான் பார்க்க மாட்டேன். சரியான நேரத்துக்கு வர வேண்டும். இன்று 5 நிமிடம் லேட்டாக வந்திருக்கிறாய். முதல் நாள் என்பதால் பரவாயில்லை, நாளையில் இருந்து சரியான நேரத்துக்கு வர வேண்டும், என்று வரதராஜன் சொல்ல வினய் மெல்ல தலையசைக்கிறான். இப்போ நீ போகலாம் என்று சொல்லி விட்டு பின் ஒரு நிமிடம் என்று ஒரு கேஸ் டாக்குமெண்டை நீட்டினார் வரதராஜன்.
இது தான் உனக்கு நான் கொடுக்கப்போகும் முதல் கேஸ், இதில் நீ எனக்கு உதவியாக இருக்க வேண்டும். முதலில் இந்த கேஸை முழுமையாக படி பின் எப்படி கேஸைப் பற்றிய விவரம் சேகரிப்பது என்று நான் சொல்கிறேன், என்று வரதராஜன் கூறினார். வினய் சரியென்று சொல்லி விட்டு நகரும் போது, வினயின் செல்போன் ஒலித்தது.இதைப் பார்த்த வரதராஜன் நாளையில் இருந்து என்னுடன் இருக்கும் நேரத்தில் செல்போனில் அதிகம் பேசும் நேரம் இருக்க கூடாது. சைலன்ட் மோடில் இருக்க வேண்டும் எனக்கு அதிக சத்தம் பிடிக்காது என்கிறார் வரதராஜன்.வினய் தலையாட்டினான், சரி நீ கிளம்பலாம் என்று சொல்லி விட்டு வரதராஜன் ஃபைலை புரட்ட ஆரம்பித்தார்.
வினய் மனதுக்குள் என்னடா இந்த ஆளு சரியான சிடு சிடுன்னு இருக்காரே, அப்பா வேண்டும் என்றே மாட்டி விட்டிருக்கிறார் என்று முணுமுணுத்தான்.
மீண்டும் செல்போன் சிணுங்கியது, யாரென்று பார்க்கையில் உமா என்று வந்தது. இவன் எடுத்து ஹலோ சொல்லு உமா என்றான். டேய் வினய் இப்போ நீ எங்க இருக்க? என்று கேட்டாள் உமா. நான் தான் நேத்து சொன்னேனே அப்பாவோட ஃபிரென்ட் கிட்ட ஜூனியரா சேர வந்துருக்கேன்,இப்போ தான் வெளியே வரேன். ஏன்? என்னாச்சு? என வினய் கேட்டான்.
எங்க ஆபிஸ் பக்கத்துல உள்ள ஹோட்டலுக்கு வாடா என்று உமா சொல்ல, அதான பார்த்தேன் சாப்பாட்டு பிரியை சாப்பிட போறதுக்கு கம்பெனிக்கு யாரும் இல்லையா அதான் என்ன கூப்பிடுறியா என்று சிரித்தான் வினய். இல்லடா முக்கியமான விஷயம் அனிதாவும் வந்துடுவா நீயும் வந்துடுன்னு சொல்லி போனை வைத்து விட்டாள் உமா.
வினய் குழம்பியவாறே பைக்கில் ஹோட்டலுக்கு சென்றான்.அங்கு உமாவும், அனிதாவும் வந்திருந்தனர்,வினய் போய் டேபிளில் அமர்ந்தான். உமா மற்றும் அனிதா முகம் மிகவும் அதிர்ச்சியடைந்தவாறு இருந்தது. வினய் புரிந்து கொண்டவனாய் என்ன எதுவும் பிரச்சனையா என்று கேட்டான்.
உமா சொல்ல ஆரம்பித்தாள், ஆமா வினய் எனக்கு கடந்த ஒரு மாசமா ஒரு போன் கால் வந்தது. ஒருத்தன் கால் பண்ணி நான் உன்னை காதலிக்கிறேன் அப்படினு சொல்லி பேசுனான், நான் திட்டி வச்சுட்டேன். ஆனால் தினமும் மெசேஜ், கால் பண்ணி தொல்லை கொடுக்க ஆரம்பிச்சான் இப்போ என்னடான்னா என்னை காதலிக்கலைனா ஆசிட் ஊத்திடுவேன்னு மிரட்டுறான். எனக்கு ரெம்ப பயமா இருக்கு வினய் என்று உமா அழத் தொடங்கிவிட்டாள். அனிதா அழாதடி ஏதாவது செய்வோம் என அவளைத் தேற்றினாள்.
வினயால் உமா அழுவதை தாங்கி கொள்ள முடியவில்லை, சிறு வயது முதலே உமா எதற்கும் இவ்வளவு அழுதது இல்லை, சிறுபிள்ளைத்தனமாக பேசிக்கொண்டு திரிவாள். ஆனால் இப்போது தேம்பி தேம்பி அழுவதை பார்த்து அவன் யாராக இருக்கும் என்று அவன் மேல் கோபம் வந்தது வினய்க்கு.வினய் சுற்றிப் பார்த்து விட்டு சரி அழாதே. எல்லாரும் நம்மளை தான் பார்க்குறாங்கனு சொன்னதும் உமா கண்களைத் துடைத்து கொண்டு ஆசுவாசமானாள். வினய் போலீசிற்கு போவோமா என்று கேட்க, வேண்டாம் எங்க அப்பா, அம்மாவுக்குத் தெரிய வந்தால் வேலைக்கு போக வேண்டாம்னு சொல்லிடுவாங்க என்று மீண்டும் அழத்தொடங்கினாள். சரி உமா அழுகாத யாரவது போலீஸ் டிபார்ட்மென்ட்ல தெரிந்தவர்கள் இருக்கிறாங்களானு பார்ப்போம் என்றான் வினய்.
அப்போது அனிதா யோசித்து விட்டு, வினய் எங்க சேனல்ல வேலை செய்யுற பொண்ணுக்கு ஒரு இன்ஸ்பெக்டர் தெரியும்.பேட்டி எடுக்கப் போனப்ப பழக்கமாம் ரெம்ப நல்ல மனிதர்னு சொல்லிட்டு இருப்பா அவகிட்ட உதவி கேட்கவா என்கிறாள். வினய் யோசித்து விட்டு சரி கேளு இப்பவே என்கிறான். அனிதா போனை எடுத்துக் கொண்டு தனியாக பேசப் போகிறாள்.
உமா இப்போது சற்று தெளிந்தவளாக ராஜ் எங்கே என்கிறாள். நான் சொல்ல மறந்துட்டேன் அவன் ஏதோ வேலையா ஊருக்கு போயிருக்கான் என்று சொன்னான் வினய்.
அனிதா பேசிவிட்டு வந்தாள், அவர் நம்பர் கிடைச்சிருக்கு. அவர்கிட்ட பேச சொல்லிருக்கா அவ அவர்கிட்ட இதை பத்தி பேசிடுறேனு சொன்னாள். நீங்க போய் நேர்ல பாருங்கன்னு சொல்லிருக்கா என்று படபடவென சொல்லி முடித்தாள் அனிதா.சரி அப்போ நான் போய் பேசுறேன், நீங்க வேலையை முடிச்சுட்டு வீட்டுக்கு போய்டுங்க என்று சொல்லி விட்டு, உமாவிடம் அந்த நம்பரைப் பெற்றுக் கொண்டு கிளம்பினான் வினய்.
இன்ஸ்பெக்ட்டர் வீட்டுக்குச் செல்கிறான், காலிங் பெல்லை அழுத்துகிறான். கதவைத் திறந்ததும் ரஞ்சித் சார் என்று வினய் இழுக்க,ஆமா நான் தான் ரஞ்சித் என்று சொல்ல, சார் நான் வினய் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு மதுரை சேனல்ல வேலை பார்க்கிற பொண்ணு உங்க நம்பர் கொடுத்தாங்க. நான் கூட இப்போ கால் பண்ணேன் நீங்க வீட்டுக்கு வர சொன்னீங்க அப்படினு சொல்லி முடித்தான் வினய்.
ஆமா வாங்க வாங்க எனக்கு இப்போ தான் டூட்டி முடிஞ்சது அதான் வீட்டுக்கு வர சொன்னேன் என்று ரஞ்சித் உள்ளே அழைத்து செல்கிறான்.
என்ன பிரச்சனை என்று கேட்க, வினய் அனைத்தையும் பொறுமையாக சொல்லி முடிக்க ரஞ்சித் தெளிவாக கேட்டறிந்தான்.
அப்போது ரஞ்சித் அந்த நம்பரைப் பெற்றுக் கொண்டு, நான் இந்த ஆளு யாருனு கண்டுபிடிச்சுட்டு உங்களை கூப்பிடுறேன் ஆனால் கம்பிளைன்ட் நீங்க கொடுக்கணும், இப்படி பண்ற ஆளுங்கள சும்மா விடக் கூடாது. இன்னைக்கு உங்க ஃபிரென்ட்க்கு நடந்தது நாளைக்கு வேற பொண்ணுக்கு நடக்கலாம் என்று விவரித்தான் ரஞ்சித். வினய்க்கும் சரி என்று மனதில் பட்டது ஆனால் உமா இதற்கு சம்மதிக்க வேண்டுமே என்று யோசித்தான்.
என்ன யோசிக்கிறீங்க என்று ரஞ்சித் கேட்க,இல்ல சார் என் ஃபிரென்ட் வீட்டுக்குத் தெரிய வந்தால் பிரச்சனை ஆகும்.கோர்ட் கேஸ்ன்னு அலையனும் என்று இழுத்தான் வினய். ரஞ்சித் குறுக்கிட்டு அந்த மாதிரி எதுவும் பிரச்சனை வராம நான் பார்த்துக்குறேன் என்கிறான்.
வினய் சரி என்று சொல்லிவிட்டு கிளம்பினான். உமாவிற்கு போன் பண்ணி எல்லாவற்றையும் சொல்லி விட்டு வீட்டுக்கு சென்றான்.
அம்மா வாணி என்னப்பா இவ்வளவு லேட்டா வர என்று சொல்லிவிட்டு சரி வா சாப்பிடு என்று சப்பாத்தியும், பனீர் பட்டர் மசாலாவையும் வைத்தாள்.வினய் சாப்பிட்டு விட்டு அம்மா பனீர் பட்டர் மசாலா சூப்பர் என்கிறான். இதுவரை நீங்க செய்ததில்லையே என்று கேட்கையில், வாணி குறுக்கிட்டு ஆமா யூடியூபில் பார்த்து செய்தேன் என்றாள் சிரித்தபடி. அம்மா உனக்கு டேப்லெட் வாங்கிக்கொடுத்தது நாங்க ருசியா சாப்பிட உதவுது என்று சிரித்துக்கொண்டே சாப்பிட்டு முடித்தான் வினய். பின்னர் அறைக்கு சென்று தூங்கி போனான் வினய். காலையில் இருந்து அலைந்த களைப்பில் நன்றாக தூங்கிப் போனான். காலை விடிந்தது. போன் அடித்தது ரஞ்சித் என்று இருந்தது, ஹலோ சொல்லுங்க சார் என்றான் வினய்.
அந்த நம்பரை டிரேஸ் பண்ணியாச்சு அவன் வேறு யாருமல்ல உங்களுக்கு நன்கு அறிந்தவன் தான் நீங்க உங்க ஃப்ரெண்ட்ட கூட்டிட்டு ஸ்டேஷன்க்கு வந்துருங்க என்று ரஞ்சித் கூறி போனை வைத்து விட்டான்.
வினய் நமக்கு தெரிந்தவனா என்று குழம்பிக்கொண்டிருந்தான்.......!?!?!
தேடல் தொடரும்...
பாகா
உங்கள் கருத்துகளை இங்கு தெரிவிக்கவும்.
Comments
Post a Comment