Facebook page

தேடல் 6

பகுதி 6

ரஞ்சித் போன் பண்ணி சொல்லியவற்றை நினைத்து வினய் குழம்பிக் கொண்டே இருந்தான். யாரு நமக்கு தெரியும்னு சொல்லிட்டு வச்சுட்டாரே என்று யோசித்தபடியே, உமாவிற்கு கால் பண்ணி தெரிவிக்கலாம் என்று செல்போனை எடுத்து டயல் செய்தான். உமாவின் அம்மா எடுத்து ஹலோ சொல்ல, நான் வினய் பேசுறேன் உமா இல்லையா என்றான் வினய். உமா குளிச்சுட்டு இருக்கா வினய், நீ எப்படி இருக்க வீட்டுக்கு இப்போல்லாம் வரதே இல்லையே என்று உமாவின் அம்மா கேட்க, வினய் யோசித்தபடி இல்லமா வேலை கொஞ்சம் இருக்குறதால வர முடியலை என்று சொல்லிக்கொண்டிருக்கையில் உமா குளித்து முடித்து தலையை துவட்டிக் கொண்டு வெளியே வந்தாள். யாரும்மா என்று உமா கேட்க நம்ம வினய் தம்பி தான் என்று சொல்லிக்கொண்டே அம்மா எப்படி இருக்காங்க என்று வினயிடம் கேட்டாள் உமாவின் அம்மா. அம்மா நல்ல இருக்காங்க உமா வந்ததும் எனக்கு கால் பண்ண சொல்லுங்க என்றான் வினய். உமா வந்துட்டாப்பா நீ பேசு என்று உமாவிடம் போனை கொடுத்து விட்டு சமயலறைக்கு சென்றாள் உமாவின் அம்மா.


சொல்லு வினய் காலையிலேயே கால் பண்ணிருக்க, உமா ரஞ்சித் போன் பண்ணாரு அவனை கண்டுபிடிச்சுட்டாங்களாம், நம்ம ஸ்டேஷன்க்கு போகணும் கிளம்பி வந்துரு என்று சொல்லி முடித்தான் வினய். என்னடா ஸ்டேஷன்க்கு வர சொல்ற வீட்டுக்கு தெரிஞ்சா கொன்னுருவாங்க விளையாடுறியா என உமா படபடப்புடன் பேச, ஒன்னும் பிரச்சனை ஆகாது நான் பார்த்துக்குறேன் வா என்றான் வினய். உமா சிறிது நேரம் மௌனமாக இருந்தாள் எதுவும் பேசாமல், எதுவும் பிரச்சனை ஆகாது போய்ட்டு வந்துடலாம்னு வினய் சொல்ல, நீண்ட யோசனைக்கு பின் சரி என்று சொல்லி கிளம்பத் தயாரானாள் உமா.


வினய் அனிதாவிடம் போனில் நடந்தவற்றை கூறினான். என்ன ரஞ்சித் சார் உங்களுக்கு தெரிந்தவன்னு சொன்னாரா யாராக இருக்கும் என்று அனிதா இழுக்க, சரி விடு நாம போய்  பார்த்துடலாம் என்று சொல்லும் போது அனிதா குறுக்கிட்டு, இல்லை இன்னைக்கு  ஷூட்டிங் இருக்கு 9 மணிக்கு நான் இருக்கணும் நீங்க போங்க நான் முடிஞ்சதும் வந்துடுறேன் என்றாள் அனிதா.சரி என்று  சொல்லி விட்டு போனை வைத்து விட்டான் வினய்.


வினய் ஸ்டேஷன்க்கு வெளியே காத்து கொண்டிருக்கையில் ஆட்டோவில் வந்து இறங்கினாள் உமா. ஹே என்னடா இங்க ஸ்டேஷன்க்கு வர சொல்றீங்க எனக்கு பயமா இருக்குடா என்று உமா சொல்ல, ஒன்னும் பயப்படத்தேவையில்லை நான் இருக்கேன்ல வா என்று வினய் சொல்ல இருவரும் உள்ளே நுழைந்தனர்.


உள்ளே மேஜையில் ஒரு  கான்ஸ்டபில் பைலை பார்த்து ஏதோ எழுதிக்கொண்டு இருந்தார். அவரிடம் சென்று வினய் சார் என்று சொல்ல, அவர் நிமிர்ந்து பார்த்து யாரு நீங்க என்ன கம்பளைண்ட் அப்படி உட்காருங்க கூப்பிடுறேன் என்று சொல்லி, காலங்காத்தாலயே வந்துட்டாங்க உயிரை வாங்க என்று முணுமுணுத்தார் அந்த கான்ஸ்டபில். வினய் மீண்டும் சார் அது வந்து என ஆரம்பிக்க, சார் உங்களுக்கு ஒரு தடவை சொன்னா தெரியாதா போங்க சார் என்று விரட்ட ஆரம்பித்தார்.

அந்த சமயம் ரஞ்சித் ஸ்டேஷனுக்குள் நுழைய சரியாய் இருந்தது. கான்ஸ்டபில் உடனே ரஞ்சித்திற்கு சல்யூட் அடிக்க என்ன ஆறுமுகம் இப்படி  தான்  கம்பளைண்ட் கொடுக்க வர மக்கள்கிட்ட கடுமையாய் நடந்துக்குவீங்களா. நம்ம அவுங்களுக்காக தான் வேலை செய்யுறோம் மறந்துறாதீங்க என்று ரஞ்சித் கடுமையான குரலில் சொல்ல, சாரி சார் என்று கான்ஸ்டபில் மண்டைய சொறிய ஆரம்பித்தார், இனி இப்படி நடந்துக்கிட்டிங்கனா உங்க மேல நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்று சொல்லிவிட்டு வினய் உள்ள வாங்க என்று ரஞ்சித் நகர்ந்தார். கான்ஸ்டபில் ஆறுமுகம் அடப்பாவிகளா ரஞ்சித் சாரை பார்க்கணும்னு முதல்லயே சொல்லிருக்கலாமேன்னு மனதுக்குள் புலம்பிக்கொண்டார்.


வினயும், உமாவும் ரஞ்சித் இருக்கைக்கு சென்று, சார் அவன் யாரு எங்களுக்கு அவனை தெரியும்னு சொன்னீங்களே என்று வினய் சொல்ல, ஆமா உங்களுக்கு நல்லா தெரியும் உங்களனா உங்களை இல்ல, உமாவிற்கு அவனை நல்லா தெரியும் என்று ரஞ்சித் சொல்ல இருவரும் முகத்தை பார்த்துக் கொண்டனர்.

சார் அவனை நாங்க பார்க்கலாமா என்று வினய் கேட்க, தாராளமாக என்று ரஞ்சித் சொல்லிக்கொண்டே கான்ஸ்டபில் அவனை இழுத்துட்டு வாங்க என்று சொன்னான். அவனை இழுத்து வந்தார்கள் யாரு இது என்று வினய் குழம்பிக் கொண்டிருக்கையில், இவரா அண்ணா நீங்களா எனக்கு கால் பண்ணி இப்படியெல்லாம் பேசுனது என்று உமா அதிர்ச்சியானாள்.

வினய் இது யாரு என்று கேட்கையில் இவர் எங்க ஆபீஸ் ஃகேப் டிரைவர் சதீஸ் தினமும் இவர் வண்டிலதான் ஆபீஸ்க்கு போவேன் சில நேரம் வர லேட் ஆகிடுச்சுனா இவர்கிட்ட போன் பண்ணி கொஞ்சம் நேரம் ஆயிடுச்சு வந்துடுறேனு சொல்லி நிறைய தடவை கால் பண்ணிருக்கேன். இவரா இத்தனை நாள் என்னை போன் பண்ணி தொல்லை பண்ணது என்று உமா அதிர்ச்சியானாள்.


உங்களை அண்ணானு தான கூப்பிட்டு இருக்கேன், ஏன் இப்படி என்னை தொல்லை பண்ணீங்க என்று உமா கேட்க, எல்லா பொண்ணுங்களும் அப்படியே கூப்பிட்டா எப்படி என்று சதீஸ் தெனாவெட்டாக பேச, டேய் மரியாதையாய் பேசு என்று வினய் கோபமாக ரஞ்சித் அவனை சமாதானமாக்கினான். பாருங்க சார் உங்க முன்னாடியே இப்படி பேசுறான் என்று வினய் கேட்க, இவன் மேல இன்னும் ஒரு கம்பளைண்ட்டும் இல்ல இவனை இங்க அடைச்சு வச்சு விசாரிச்சதே சட்டத்துக்கு விரோதம் தான் நீங்க முதல்ல இவன் மேல ஒரு கம்பளைண்ட் கொடுங்க அப்புறம் நான் பார்த்துக்கறேன் என்று சொன்னான் ரஞ்சித்.

கம்பளைண்ட்டா என்று உமா யோசிக்க ஆரம்பித்தாள். இப்போ உங்களுக்கு நடந்தது வேற பொண்ணுக்கும் நடக்கலாம் இப்படியே இவனை விட்டா உங்க ஆபீஸ்ல இருக்குற மத்த பொண்ணுகளுக்கும் பிரச்சனை கொடுப்பான் என்று ரஞ்சித் தெளிவாக சொல்ல, உமா யோசித்து விட்டு சரி கொடுக்குறேன் ஆனால் அம்மா அப்பாவுக்கு தெரிஞ்சா என்னை வேலைக்கு அனுப்ப மாட்டாங்க என்று சொன்னாள். உங்க அப்பா அம்மாவை வர சொல்லுங்க நான் பேசுறேன் என்று சொன்னதும் உமா திடுக்கிட்டாள்.

உமா பயப்படாத நாங்க பேசி புரிய வைக்கிறோம் என்று வினய் சொன்னதும் உமா சரி என்று அம்மாவுக்கு கால் செய்து நடந்த எல்லாவற்றையும் சொல்லி வர வைத்தாள். வினயும், ரஞ்சித்தும் அவர்களுக்கு புரிய வைத்தனர். அவர்களும் இதற்கு சம்மதிக்கவே சதீஸ் வினயை பார்த்து கத்த ஆரம்பித்தான், டேய் என்மேல கம்பளைண்ட் கொடுக்க வைக்குறேல உன்ன சும்மா விடமாட்டேன் என்றான். கான்ஸ்டபில்ஸ் அவனை இழுத்துட்டு போய் நம்ம டிரீட்மென்ட் ஆரம்பிங்க என்றான் ரஞ்சித்.


பின் கம்பளைண்ட் கொடுத்து விட்டு அனைவரும் கிளம்பினர். நீங்க எதுவும் கவலை படாதீங்க எதுவும் பிரச்சனைனா எனக்கு கால் பண்ணுங்க என்று சொன்னான் ரஞ்சித். சரி என்று சொல்லி அனைவரும் கிளம்பினர்.

வினய் உமாவிடம் ஐயோ லேட் ஆயிடுச்சு அந்த வரதராஜன் சார் ஒரு முசுடு ஒரு  நிமிஷம் லேட் ஆனாலும் அவ்ளோதான் நான் கிளம்புறேன் சாயந்திரம் பார்க்கலாம் என்று உமாவிடமும் அவள் அப்பா அம்மாவிடம் சொல்லிட்டு பைக்கில் பறக்க ஆரம்பித்தான்.

சரிமா நீங்க ஆட்டோல வீட்டுக்கு போயிருங்க, நான் அப்படியே போற வழியில ஆபீஸ்ல இறங்கிக்குறேன் என்று சொல்லி விட்டு நினைவு வந்தவளாய் அவள் கைப்பையை தேடினாள். அய்யோ ஹாண்ட்பேக் உள்ள வச்சுட்டு வந்துட்டேன் போய்  எடுத்துட்டு வந்துடுறேனு சொல்லிட்டு உள்ளே நுழைந்தாள் உமா.


ரஞ்சித் டேபிளில் இருந்த பையை எடுத்து இது யாரு இங்க விட்டு போனது என்று பையை திறந்து பார்க்கையில், உமாவின் ஐடி கார்டு இருந்தது ப்ராஜெக்ட் அனலிஸ்ட் என்று போட்டு இருந்தது. அதை பார்த்துக் கொண்டிருக்கையில், சார் அது என்னோட பேக் மறந்து வச்சுட்டேன் என்று சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தாள் உமா.

என்னங்க இப்படி அஜாக்ரதையா இருக்கிறதா என்று சொல்லி விட்டு பத்திரமா வச்சுக்கோங்க என்று சொல்லி கொடுத்தார் ரஞ்சித் தேங்க்ஸ் என்று சொல்லி கொண்டு நகர்ந்தாள் உமா.  மீண்டும் யோசித்தவளாய் வந்து ரஞ்சித்திடம் தேங்க்ஸ் சார் என்று சொன்னாள், எத்தனை தடவை தேங்க்ஸ் சொல்வீங்க ஒரு பேக் எடுத்து கொடுத்ததுக்கு என்று சிரித்துக்கொண்டே ரஞ்சித் சொல்ல, அய்யோ இந்த தேங்க்ஸ் அதுக்கு இல்ல எங்க அம்மா அப்பாவுக்கு புரிய வச்சதுக்கு என்று சொன்னாள் உமா. பரவாயில்லை இது என் வேலை மக்களுக்கு சில விஷயங்கள் புரியுறது இல்ல எல்லாரும் போலீஸ்னா பயப்படுறாங்க, சில பேரை  மட்டும் வச்சு எல்லா போலீஸும் அப்படிதானு நினச்சுடுறாங்க அதை புரிய வச்சு போலீஸ் உங்க நண்பன் என்று அவுங்களுக்கு நம்பிக்கை கொடுக்குறது எங்க கடமை அதைத்தான் செஞ்சேன் என்றான் ரஞ்சித்.

உமா அவன் பேசுவதையே பார்த்து கொண்டு இருந்தாள். சரி நீங்க கிளம்புங்க ஏதாவது பிரச்சனைன்னு வந்தா கால் பண்ணுங்க ஆனால் அவன் இனிமேல் உங்ககிட்ட வாலாட்ட மாட்டான் அதுக்கு நான் பொறுப்பு என்று சொன்னான் ரஞ்சித். சரி தேங்க்ஸ் சார் என்று சொல்லி உமா நகர்ந்தாள். பின் அவர்கள் மூவரும் ஆட்டோ பிடித்து சென்றனர், உமா ஆபீஸ் வந்ததும் இறங்கி விட்டாள்.

அனிதா உமாவிற்கு போன் பண்ணி நடந்த எல்லாவற்றையும் கேட்டாள், சரி எப்படியோ பிரச்சனை முடிவுக்கு வந்துருச்சு அது போதும் என்று சொல்லி விட்டு சரி வினய்க்கு நிறைய தடவை கால் பண்ணேன் எடுக்கவே இல்ல என்று அனிதா கேட்க, அதுவா வினய் வரதராஜன் சார் வீட்ல இருப்பான் அவர் ரெம்ப ஸ்ட்ரிக்ட் போன் கூட பேச விட மாட்டார் என்று உமா சொன்னாள். ஆமா என்கிட்டயும் நேத்து சொன்னான் மறந்துட்டேன் சரி சாயந்திரம் பார்க்கலாம் என்று சொல்லி வைத்து விட்டாள்.


வினய் வரதராஜன் வீட்டில் அமர்ந்து அவர் கொடுத்த பைலை பார்த்து கொண்டிருந்தான், அப்போது இருவர் வந்து வரதராஜனை பார்க்கணும் என்று சொல்லிக்கொண்டு காத்திருக்காமல் விறுவிறுவென்று உள்ளே நுழைந்தனர். யார் நீங்க அய்யாசாமி அய்யாசாமி என்று கத்த ஆரம்பித்தார் வரதராஜன். அய்யாசாமி வேறு யாருமல்ல வரதராஜனின் உதவியாளர்.யாரு இது இவுங்கள எதுக்கு என்ன கேட்காம உள்ள விட்ட என்று கேட்டார் வரதராஜன். இல்ல அய்யா என்ன தள்ளி விட்டு உள்ளே வந்துட்டாங்க என்று சொன்னான் அய்யாசாமி.


சரி நீ போ என்று அனுப்பி விட்டு யார் நீங்க என்று கேட்க, எங்களை மாதவன் அனுப்பி வச்சாரு உங்க கிட்ட பேச வந்துருக்கோம் என்று சொன்னதும், வரதராஜனுக்கு கோபம் தலைக்கேற கத்த ஆரம்பித்தார். வினய் இதை பார்த்து கொண்டிருந்தவன் அதிர்ச்சியானான்.

தேடல் தொடரும்......


பாகா

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடவும்.

Comments

Popular posts from this blog

தேடல் 25

தேடல் 20

தேடல் 10