தேடல் 3
பகுதி 3
அனிதா தூங்கப்போகும் பொழுது செல்போன் சிணுங்கியது. வினய் இருக்குமோ என்ற சந்தோசத்தில், ஹலோ என்கிறாள் எதிர் முனையில் அனிதாவா என்று ஒரு குரல் , ஆமா அனிதா தான் சொல்லுங்க யாரு? நான் சுரேஷ் மதுரை டிவி சேனல்ல வேலை பார்க்குறேன். நீங்க மீடியால வேலை பார்க்க முயற்சி பண்றதா உங்க பிரெண்ட் சொன்னாங்க. ஆமா சார் நான் ட்ரை பண்ணிட்டு இருக்கேன் நிறைய பிரெண்ட்ஸ் கிட்ட சொல்லி வச்சிருந்தேன் என்றாள் அனிதா. நாளைக்கு மதுரை டிவி சேனல்ல ஒரு இன்டெர்வியூ இருக்கு ஒரு பொண்ணு தான் தேடிட்டு இருக்காங்க, சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கணும், உங்களுக்கு பிடிச்சிருந்தா நாளைக்கு இன்டெர்வியூ வர முடியுமா. கண்டிப்பா வரேன் சார் என்றாள் அனிதா. சாரி இந்த நேரத்துல சொன்னதுக்கு, காலையில சொல்லணும்னு நினச்சேன் ஆனால் வேலையில அப்படியே மறந்துட்டேன் இப்போதான் நியாபகம் வந்தது, காலையில 9 மணிக்கு வந்துருங்க என்றான் சுரேஷ். பரவாயில்லை சார் நாளைக்கு கண்டிப்பா வந்துடுறேன் என்று சொல்லி விட்டு தூங்கி விட்டாள் அனிதா.
காலை விடிந்தது அனிதா எழுந்து கிளம்ப ஆயத்தமானாள். செல்போனை பார்த்தாள் ஏதோ ஒரு நம்பரில் இருந்து மிஸ்டு கால் வந்திருந்தது. அய்யயோ இன்டெர்வியூ விஷயமா திருப்பி யாரவது கால் செய்திருப்பாங்களோ என்று பதறிப் போய் அந்த நம்பருக்கு கால் செய்தாள், அவளும் நானும் அமுதும் தேனும் என்று காலர் டியூன் கேட்டது அப்படியே அனிதா அந்த பாட்டை ரசித்துக் கேட்டுக் கொண்டிருக்கையில், ஹாய் அனிதா நைட் நல்லா தூங்கிட்டிங்க போல என்றது ஒரு குரல். யாரு நீங்க என்றாள் அனிதா, சாரி நான் வினய் என்று சொன்னதும் அனிதாவுக்கு சந்தோசம் தாங்க வில்லை. அனிதாவுக்கு இரவில் வினயை நினைத்து குழப்பி கொண்டு தூங்க போனது அத்தனையும் மறந்து தூக்க கலக்கத்தில் இருந்தவளுக்கு சந்தோசம் தொற்றி கொண்டது. ஹாய் வினய் நீங்களா நான் எதிர்பார்க்கவே இல்ல சொல்லுங்க வினய் என்றாள் அனிதா, இல்ல சும்மாதான் போன் பண்ணேன் ஆனால் நீங்க தூங்கிட்டிங்க போல என்றான், ஆமா தூங்கிட்டேன் இன்னைக்கு ஒரு இன்டெர்வியூ இருக்கு அதான் சீக்கிரம் தூங்கிட்டேன் என்று சொல்ல, ஹேய் கங்கிராட்ஸ் அனிதா இன்டெர்வியூ நல்லா பண்ணுங்க என்று சொல்ல வந்ததை சொல்லாமல் போனை வைத்து விட்டான். ஆம் இன்னைக்கு என்ன ப்ரோக்ராம் என்று கேட்டு விட்டு மீட் பண்ணலாமா என்று கேட்கத் தான் போன் பண்ணினான் இன்டெர்வியூ என்றதால் வாழ்த்துக்கள் சொல்லி வைத்து விட்டான் வினய்.
அனிதாவுக்கு சந்தோசம் தாங்கவில்லை அப்போ அவனுக்கும் மனசுல ஏதோ தோன்றி இருக்க வேண்டும், அதான் நைட்டே போன் செய்திருக்கான் என்று ஆனந்தத்தில் மிதந்தாள். அப்புறம் நினைவு வந்தவளாய் ஐயோ நேரமாகுது என்று கிளம்பத் தயாரானாள். நேரத்துக்கு கிளம்பி பேருந்தை பிடித்து விட்டாள், பேருந்து கிளம்பியது செல் போனில் பாட்டு கேட்டு கொண்டே பேருந்தில் பயணித்தாள். அப்போது அவளும் நானும் அமுதும் தேனும் என்ற பாட்டு வந்தது இது இவளுக்கு மிகவும் பிடித்த பாட்டு. அப்போது தான் கவனித்தாள் இத தான் வினய் காலர் டியூன் அப்போ அவனுக்கும் பிடிக்கும் போல என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது அவள் இறங்க வேண்டிய இடம் வந்தது. மதுரை டிவி என்ற லோகோவுடன் பெரிய கட்டடம் அனிதாவை வரவேற்றது. உள்ளே நுழைந்தாள் அனிதா வரவேற்பாளரிடம் விவரம் கேட்டாள்.
இன்னைக்கு இன்டெர்வியூக்கு வர சொல்லி இருந்தாங்க என்று சொல்லி கொண்டிருக்கையில், உங்க பெயர் என்ன என்று கேட்டார் வரவேற்பாளர். அனிதா என்று சொன்னாள், யார் போன் செய்தது என்று கேட்ட வரவேற்பாளரிடம் சுரேஷ் என்று சொல்லி வழக்கமான பார்ம்ஸ் எல்லாம் நிரப்பி பயோ டேட்டாவையும் கொடுத்து விட்டு காத்திருந்தாள். சுரேஷ் வந்தான் எல்லாரும் இன்டெர்வியூக்கு வந்துட்டாங்களா என்று கேட்டான் வரவேற்பாளரிடம், வந்துட்டாங்க என்று சொன்னதும் அனிதா என்கிற பொண்ணு வந்துட்டாங்களா என்று சுரேஷ் கேட்க, ஆமா சார் வந்துட்டாங்க அங்க இருக்காங்க என்று சொன்னதும் அனிதாவை பார்த்து ஹாய் நான் தான் சுரேஷ் உங்களுக்கு நேத்து கால் பண்ணி சொன்னது என்று அறிமுகப்படுத்தி கொண்டான். தேங்க் யூ சார் என்றாள் அனிதா. இன்டெர்வியூ நல்ல தைரியமா பண்ணுங்க என்று சொல்லி விட்டு சென்றான். ஒவ்வொருவராக இன்டெர்வியூ அறைக்கு சென்று விட்டு திரும்பினர். இப்போது அனிதாவின் நேரம் அனிதா அறைக்குள் சென்றாள்.
இருவர் அமர்ந்திருந்தனர் இயக்குனர் மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருக்கும் என்று அனிதா மனதில் நினைத்து கொண்டாள். இருக்கையில் அமர்ந்தாள் உங்களைப் பற்றி சொல்லுங்கள் என்றதும் அவள் பெயர் மற்றும் அவளைப் பற்றி சொல்லி முடித்தாள். சாப்ட்வேர் படித்து விட்டு உங்களுக்கு ஏன் மீடியாவில் வேலை பார்க்க இவ்வளவு ஆசை என்று கேள்வி கேட்பார்களோ என்று நினைத்து கொண்டிருக்கையில், அனிதாவிடம் ஒரு பேப்பரை நீட்டினார்கள் இதான் ஸ்கிரிப்ட் நீங்க படிச்சுட்டு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கணும் நாங்க தான் கேமிரா என்று சொல்லி விட்டு ஆரம்பியுங்கள் என்றனர். அனிதா ஒரு தடவை பார்த்து விட்டு படபடவென தேர்ந்த தொகுப்பாளினி போல அனைத்தையும் சொல்லி முடித்தாள். இருவருக்கும் அனிதாவின் அழகும் அவளின் தமிழ் உச்சரிப்பும் தேவையான இடங்களில் ஆங்கில வார்த்தைகளை போட்டு பேசியதும் மிகவும் பிடித்து விட்டது. இருவரும் அனிதாவிடம் இது சமையல் நிகழ்ச்சி உங்களுக்கு சம்மதமா என்று கேட்டனர், சம்மதம் சார் மீடியால வேலை பார்க்குறது தான் என் குறிக்கோள் அதுல எதுவா இருந்தாலும் நல்ல பெயர் எடுப்பேன் சார் என்று சொல்ல அவர்களுக்கு பிடித்து போனது. சரி உங்களை நாங்க செலக்ட் பண்றோம்னு சொன்னதும் அனிதாவுக்கு வானத்தில் மிதப்பது போன்று இருந்தது. தேங்க் யூ சார் என்று அனிதா சொல்ல, உங்களுக்கு நாங்க போன் செய்வோம் ஷூட்டிங் விவரம்லாம் சொல்வாங்க தயாரா இருங்க என்று சொல்லி விட்டு நீங்க போகலாம் என்றனர்.
அனிதா சந்தோசத்தின் உச்சத்தில் இருந்தாள். சுரேஷ் எங்கு இருக்கிறார் என்று பார்த்து விட்டு அவரிடம் சார் என்னை செலக்ட் பண்ணிட்டாங்க தேங்க் யூ சார் என்று சொன்னாள். எனக்கு எதுக்கு தேங்க்ஸ் உங்க திறமையினால் செலக்ட் ஆகி இருக்கீங்க என்று சொல்லி விட்டு, சரி உங்களுக்கு நான் ஷூட்டிங் எப்போன்னு போன் பண்ணுவேன் தயாரா இருந்துக்கோங்க என்று சொல்லி விட்டு கிளம்பினான். அனிதா வெளியே வந்தாள் அம்மாவுக்கு போன் செய்து வேலை கிடைத்த சந்தோச செய்தியை சொல்லி விட்டு வைத்ததும் வினய் போன் செய்தான். ஹலோ வினய் இப்போதான் உங்களுக்கு கால் பண்ணனும்னு இருந்தேன் நீங்களே பண்ணிட்டீங்க என்றாள், என்ன அனிதா வேலை கிடைச்சுருச்சா என்று கேட்டான். உங்களுக்கு எப்படி தெரியும் என்று அனிதா கேட்க, உங்க திறமை மேல உள்ள நம்பிக்கையில்ல தான் சொன்னேன் அது மட்டுமில்லாம நீங்க இவ்வளவு சந்தோசமா பேசுறீங்களே அதுலயே தெரிஞ்சது என்றான் வினய். ஆமா வினய் கிடைச்சுருச்சு என்றாள் அனிதா. அப்போ ட்ரீட் எப்போன்னு வினய் கேட்க, நீங்க ஃப்ரியா இருந்தா
இப்போவே கொடுக்கலாமே என்று அனிதா சொன்னாள். சரி எங்க வர என்று வினய் கேட்டு விட்டுக்கிளம்பினான்.
அனிதா ஹோட்டலுக்கு வெளியே வினய்க்கு காத்திருந்தாள். வினய் பைக்கை நிறுத்திவிட்டு அனிதாவிற்கு போன் செய்தான், அனிதா எங்க இருக்கீங்க என்று. நான் ஹோட்டல் வாசலில் இருக்கேன் வாங்க என்று சொன்னதும், நான் உங்களை பார்த்துட்டேன் வரேன்னு சொல்லி கால் கட் செய்தான் வினய். ஏன் வெளிய நிக்குறீங்க உள்ள போய் உட்கார்ந்துருக்கலாமே என்று கேட்டான் வினய், இல்ல எனக்கு தனியா உட்கார்ந்துருக்க ஒரு மாதிரி இருக்கும்னு தான் இங்க நின்னுட்டு இருந்தேன் பரவாயில்லை வாங்க போலாம் என்று சொல்லி உள்ளே நுழைந்தாள் அனிதா. இருவரும் ஒரு டேபிளில் அமர்ந்தனர் சாப்பாடு ஆர்டர் பண்ணி விட்டு காத்திருந்தனர். அப்புறம் வேலை கிடைச்சுருச்சு சந்தோசமா என்று கேட்டான் வினய். ரெம்ப சந்தோசம் இத்தனை நாள் இதுக்கு தான் காத்திட்டு இருந்தேன் என்றாள் அனிதா. என்ன நிகழ்ச்சினு சொன்னாங்களா என்று வினய் கேட்க, ஆமா சமையல் நிகழ்ச்சி என்று அனிதா சொல்ல, சமையல் நிகழ்ச்சியா கால் பண்ணி இந்த பாட்டு போடுங்க அந்த பாட்டு போடுங்கனு சொல்வாங்களே அது இல்லையா என்று வினய் நக்கலாக கேட்க, என்ன கிண்டலா நீங்க சொன்ன அந்த பாட்டு நிகழ்ச்சியை விட இந்த சமையல் நிகழ்ச்சி எனக்கு ரெம்ப பிடிக்கும் அதுவும் இல்லாம இப்போ அது தான் ட்ரெண்ட் என்று சொல்லி முடித்தாள் அனிதா. சாப்பாடு வந்தது இருவரும் சாப்பிட்டுக்கொண்டே பேசிக்கொண்டிருக்கையில், வினய்க்கு உமா போன் பண்ணினாள்.
செல்போனை எடுத்து ஹலோ சொன்னான், என்னடா டிக்கெட் புக் பண்ணிட்டியா இல்ல நான் பண்ணவா என்றாள், அப்போது தான் அவனுக்கு நியாபகம் வந்தது இன்னைக்கு சினிமாவுக்கு போவோம் என்று சொல்லி இருந்தாள். அனிதாவிடம் ஒரு நிமிஷம் என்று சொல்லி எழுந்து தள்ளி வந்து பேச ஆரம்பித்தான் இல்ல உமா நான் பண்ணல நீயே பண்ணிடு என்றான் வினய். சரிடா நீ,நான் ராஜ் 3 டிக்கெட் தான நான் புக் பண்ணிடுறேன் என்றாள். உமா நேத்து வந்த அனிதா வரலையா என்று கேட்டான் வினய், என்னடா அனிதாவை வரலயான்னு கேட்குற, இல்ல நேத்து வந்தாங்களே அதான் கேட்டேன் என்று வினய் சமாளிக்க, அவ வரமாட்டா என்று உமா சொன்னாள். இல்ல கேட்டு பாரு வராட்டி விட்டுரு என்று வினய் சொல்ல, என்னடா நேத்து தான் நீ பார்த்த அதுக்குள்ள அவளையும் சினிமாவுக்கு கூப்பிடுன்னு சொல்ற சரி நான் கேட்டு பார்க்கிறேன் ஆனால் அவள் வருவாளான்னு தெரியல என்று சொல்லி விட்டு கால் கட் செய்தாள் உமா. வினய் போய் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தான்.
அனிதாவிற்கு உமா கால் வந்தது, உமா கால் பண்றா என்று அனிதா சொல்ல, கால் பண்ண சொன்னதே நான் தான என்று மனசுக்குள் வினய் சொல்ல,நீங்க இருக்குறத சொல்லவா என்று கேட்டாள். இல்ல சொல்ல வேண்டாம் நீங்க பேசுங்க என்றதும் உமா சொல்லுடி நானே போன் பண்ணனும்னு இருந்தேன் நீ பண்ணிட்ட என்றாள் அனிதா. என்னது நீ கால் பண்ணனும்னு இருந்தியா அதிசயமா இருக்கே என்று உமா சொல்ல, ஆமாடி எனக்கு வேலை கிடைச்சுருச்சு என்றாள். ஹேய் கங்கிராட்ஸ்டி என்றாள் உமா, தேங்க்ஸ்டி என்று சொல்லி முடிக்கையில், நாங்க இன்னைக்கு சினிமாவுக்கு போறோம் நீயும் வாடி என்று உமா கேட்டாள். ஐயோ இல்லடி அம்மாட்ட இன்டெர்வியூனு சொல்லிட்டு வந்துருக்கேன் முடியாது என்று சொல்ல, அம்மா எதுவும் சொல்ல மாட்டாங்க அதுக்கு நான் கியாரண்டி என்றாள் உமா,வினய் எதுவும் தெரியாதது போல் என்ன என்று சைகையில் கேட்க, உமா சினிமாவுக்கு கூப்பிடுறா என்று செல்போனில் ஒரு கையை வைத்து பொத்தி கொண்டு சொன்னாள். வினய் ஆமா இன்னைக்கு சொல்லிருந்தா நானும் ராஜும் வரோம்னு சொல்லிருந்தோம் அதான் உங்களையும் கூப்பிடுறா நீங்களும் வாங்க படம் நல்லா இருக்காம் என்று சொன்னான் வினய். அனிதாவிற்கும் ஆசை சரி வரேன் என்று உமாவிடம் சொல்லி விட்டு அம்மாவிற்கு போன் செய்தாள்.
அம்மா உமா போன் பண்ணினா சினிமாவுக்கு போறாளாம் என்னையும் கூப்பிட்டா போயிட்டு வரட்டுமா என்று கேட்க, ஆமா அனிதா,உமா எனக்கும் போன் பண்ணி அப்பொவே பேசிட்டா என்றாள் அனிதாவின் அம்மா. அப்போ உனக்கு பேசிட்டு தான் எனக்கு பண்ணி கேட்டுருக்கா போல என்றாள் அனிதா. ஆமாமா நீ போயிட்டு வா என்றாள் அம்மா, சரிம்மா நான் போயிடு வரேன் சொல்லி சாப்பிட தொடங்கினாள்.இருவரும் சாப்பிட்டு விட்டு பைக்ல சேர்ந்தே போயிரலாம் என்று வினய் கேட்க, இல்ல நான் ஆட்டோல வந்துடுறேன் நீங்க பைக்ல போங்கன்னு அனிதா சொன்னாள். வினயும் சரி என்று சொல்லி ஆட்டோவில் அனிதாவை ஏத்தி விட்டு பைக்கில் மாலுக்கு வந்தான். அனைவரும் சினிமா ஹாலுக்குள் சென்று படம் பார்த்து கொண்டிருந்தனர். அனிதா செல் போன் அடித்தது ஹலோ என்று சொல்ல சத்தம் கேட்க வில்லை என்று வெளியே வந்து பேசினாள்.
ஹலோ நான் சுரேஷ் பேசுறேன், சொல்லுங்க சார் என்றாள் அனிதா. உங்களுக்கு ஷூட்டிங் திங்கட்கிழமையே ஆரம்பிக்கலாம்னு சொல்லிட்டாங்க ஒரு மாசம் கண்டிப்பா நீங்க எங்கயும் வெளியூர் போக முடியாது நீங்க பொண்ணுன்றதால சனிக்கிழமை ஞாயிற்று கிழமை லீவு, ஆனால் அன்னிக்கும் ஏதாவது ஷூட்டிங் இருந்தா நீங்க வர வேண்டி இருக்கும் என்று சொல்லி முடித்தான் சுரேஷ். எனக்கு எல்லாமே ஓகே எதுவும் பிரச்சனை இல்ல என்று சொல்லி ரெம்ப தேங்க்ஸ் சார் உங்காளால் தான் இந்த வேலை கிடைச்சது நீங்க போன் பண்ணி சொல்லாட்டி எனக்கு கிடைச்சுருக்காது என்று சொன்னாள் அனிதா . நான் என்னமா பண்ணிட்டேன் இதுக்கு நீங்க அவருக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும் என்றான் சுரேஷ். அவரா யாரு சார் அது என்று அனிதா குழப்பத்தில் கேட்டாள்?!
தேடல் தொடரும்......
பாகா
உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்
Comments
Post a Comment